இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு - 17 பிரதேசங்கள் அபாய வலயங்களாக மாறின!!
இலங்கையில் இந்த மாதத்தின் இதுவரையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நோயாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால், கிண்ணியா, மூதூர், இரத்தினபுரி, எஹலியகொட, எம்பிலிப்பிட்டிய, பலாங்கொடை, புத்தளம், மஹவெவ, வென்னப்புவ, சிலாபம், கல்பிட்டி, நாத்தாண்டிய, மாத்தறை, மொரவக, மன்னார், குருநாகல் மற்றும் வாரியபொல ஆகிய 17 பிரதேசங்கள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் (ஜனவரி வரை) டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களை தினந்தோறும் சுத்தம் செய்து, நீர் தேங்க விடாது வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி , வாந்தி போன்றன 2 நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனே வைத்தியரை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
