வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்லும் பெண்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு, பெண்கள் வீட்டு வேலை மற்றும் பயிற்சியற்ற துறைகளில் தொழிலுக்காக அனுப்பப்படும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் நாளை முதல் (11.11.2022) நடைமுறையாகும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இந்த விடயத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் வெளிநாட்டு தொழில்களுக்காக சுற்றுலா விசா மூலம் அழைத்துச்செல்லப்படும் பெண்கள் துன்புறுத்தல்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்
இதில் அநேகமானோர் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் நாடுகளுக்கு சென்றவர்கள் என தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் ஜனவரி முதல் அக்டோபர் வரையான காலப்பகுதியில் பண மோசடி செய்ததாக கூறி விசேட புலனாய்வுப் பிரிவுக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறான முறைப்பாடுகளுக்கமைய 182 முறைப்பாடுகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்லும் முயற்சி
மேலும் இவ்வருடம் ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சட்டவிரோதமான முறையில் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் முலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
