தேர்தலுக்கான பிணை வைப்பு தொகையில் மாற்றம்: கிடைத்தது அங்கீகாரம்
தேர்தலுக்கான பிணை வைப்பு தொகையினை திருத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதிபர் தேர்தல் சட்டம், நாடாளுமன்ற தேர்தல் சட்டம் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றின் விதிகளின்படி, தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப தற்போதுள்ள பாதுகாப்பு வைப்பு பண வரம்புகளை உரிய காலத்தில் புதுப்பிப்பது பொருத்தமானது என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பிணை வைப்புத் தொகையை பின்வருமாறு திருத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக அதிபர் மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உயர்த்தப்பட்ட தொகைகள்
1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க அதிபர் தேர்தல் சட்டத்தின் பிரகாரம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் வேட்பாளரின் பிணை வைப்புத்தொகை 2.6 மில்லியன் ரூபாவாகவும், சுயேச்சை வேட்பாளரின் பிணை வைப்புத்தொகை 3.1 மில்லியன் ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அத்தோடு, 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் வேட்பாளர் ஒருவரின் பிணை வைப்புத் தொகை ரூ.11,000/- ஆகவும், சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த ஒரு வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை ரூ.16,000/- ஆகவும் அதிகரிக்கபட்டுள்ளது.
மேலும், 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் ஒரு வேட்பாளரின் பிணை வைப்புத்தொகை ரூபா 6,000/- ஆகவும், சுயேச்சைக் குழுவின் ஒரு வேட்பாளரின் பாதுகாப்பு வைப்புத்தொகை ரூபா 11,000/- ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |