சீரற்ற காலநிலை..! நிரம்பி வழியும் பிரதான நீர்த்தேக்கங்கள்
புதிய இணைப்பு
நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 24 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 6 நீர்த்தேக்கங்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 6 நீர்த்தேக்கங்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களும், பதுளை, குருநாகல், மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா 2 நீர்த்தேக்கங்கள் என மொத்தம் 24 நீர்த்தேக்கங்கள் இவ்வாறு நிரம்பி வழிவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் (Department of Meteorology ) இன்று (01.05.2025) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பலத்த மழைவீழ்ச்சி
மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ,பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
