தேசபந்துவின் கைது விவகாரம் : அரசின் நிலைப்பாடு குறித்து சிஐடியில் முறைப்பாடு
முன்னாள் பதில் காவல்துறைமா அதிபரை கைது செய்ய முடியாத பரிதாப நிலையில் அநுர அரசாங்கம் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ (Chamal Sanjeewa) தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) நேற்று (07) வருகை தந்திருந்த வைத்தியர் சமல் சஞ்சீவ, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை விளைவித்துள்ளது.
கடவுச்சீட்டு பிரச்சினை
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி, கடந்த அரசாங்கத்தில் இருந்த நாடாளுமன்ற அமைச்சர்களுக்கு எதிரான பண மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்குடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தேசபந்து தென்னகோனை கைது செய்ய முடியாத பரிதாபநிலையில் உள்ளது.
பதில் காவல்துறைமா அதிபர் என்பவர் இந்நாட்டின் சாதாரண பிரஜை ஒருவர் அல்ல. எனினும் அரசாங்கம் அவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்ளவோ அவரை கைதுசெய்வதற்கோ முடியாத நிலையில் உள்ளது.
மேலும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது கடவுச்சீட்டு, ஈ-விசா உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் நிலவிவந்தன. ஆயினும் ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ அவை தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.
தென்னகோனின் தலைமறைவு
அரசாங்கம் வழமை போல குற்றவாளிகளை பாதுகாத்து ஆட்சிக்கு இடையூறு ஏற்படும் போது குற்றவாளிகளை ஒழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது.
ஆகையால் நாளை (08) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னாள் காவல்துறைமா அதிபரை கைது செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய உள்ளோம். குறித்த முறைப்பாடு தற்போதைய பிரதி காவல்துறை மா அதிபரிடம் கையளிக்கப்பட உள்ளது.
தேசபந்து தென்னகோனின் தலைமறைவு அரசாங்கத்தின் நிலைப்பாடு, சட்ட ஒழுங்குமுறை மற்றும் இந்நாட்டு பாதுகாப்பு துறை மீதான சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் உள்ளது.
ஆகையால் இவ்வாறான கெடுபிடியிலிருந்து தற்போதைய அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக, குறைந்தபட்சம் நீதிமன்றத்தில் வந்து முன்னிலையாகுமாறு முன்னாள் காவல்துறைமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கிறேன்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்