இன, மத பேதமின்றி இதுவரை சேவையாற்றினேன்! தேசபந்து பெருமிதம்
இன, மத பேதமின்றி மற்றும் அரசியல் பாகுபாடின்றி தாம் இதுவரை காலம் சேவையாற்றியதாக சிறிலங்காவின் பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டதன் பின்னர், மத வழிபாடுகளில் ஈடுபட்ட தேஷபந்து தென்னகோனிடம், ஊடகவியளாலர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அனைவரினதும் அனுபவங்கள் மற்றும் அவர்களது ஆலோசனைகளை கொண்டு இலங்கை மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதே அவரது நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் பாவனை
மேலும் தேஷபந்து தென்னகோன் கூறியுள்ளதாவது, “சிறில ங்காவின் காவல்துறையில் நான் 25 வருடங்களாக சேவையாற்றி வருகிறேன். பல பதவிகளை வகித்துள்ளேன். என்னைப் போன்ற அனுபவமுள்ள பல சிரேஷ்ட கால்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள்.
முதலில், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன். இதனை தொடர்ந்து, போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
முக்கிய திட்டம்
நாடளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் போதைப்பொருட்கள் தற்போது பாடாசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாரிய பிரச்சனையாக மாறியுள்ளது.
இதற்கு முன்னுரிமை வழங்கி, முக்கிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளேன். அத்துடன், திட்டமிட்ட குற்றச் செயல்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.என்னுடன் சேவையாற்றிய அனைவரும் என்னைப்பற்றி நன்கு அறிவார்கள்.
இந்த நிலையில், அரசியல் ஆதரவுகளின்றி பக்கசார்பற்ற வகையில் நான் செயல்படுவதை எதிர்காலத்தில் காணக்கூடியதாக இருக்கும்” என்றார்.