ஆசிரியர்களாக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் : நீதி கோரும் சஜித்
அரசாங்கத்திற்கு ஆசிரியர்களாக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தற்போது முக்கியமில்லை என்றாலும், இலவசக் கல்விக்காக இவர்கள் செய்த பணிகளை எம்மால் மறக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கோட்டை தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களாக பணியாற்றி வந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நேரில் சந்திக்க சென்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ”அநீதிக்குள்ளாகியுள்ள 16,600 ஆசிரியர்களாக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளுக்காக தான் முன்நிற்பதாகவும், இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தபோது, இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை அல்ல என அரசாங்கம் கூறியது.
ஆசிரியர் சேவை
கடந்த அரசாங்கம் 2020 ஆம் ஆண்டில் 53,000 பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தி, அவர்களில் 22,000 பேரை இலவசக் கல்வியை வலுப்படுத்த ஆசிரியர்களாக உள்ளீர்த்தது.
கொரோனா தொற்றுநோயின் சிரமங்களுக்கு மத்தியில் இவர்கள் சிறந்த சேவைகளை முன்னெடுத்திருந்தாலும் அதிகபட்ச வேலைகளை வாங்கிய பின்னர் அரசாங்கம் தற்போது அவர்களை கைவிட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் இருந்தாலும், நேரடியாக இணைத்துக் கொள்ளாது, சாதாரண முறைமையின் ஊடாக ஆசிரியர் சேவையில் இணையுமாறு அரசாங்கம் கூறிவருகிறது.
இந்த அனுபவம் வாய்ந்தவர்கள் நடைமுறைப் பரீட்சை எழுதி, தரம் 2.2 க்கு சேர்த்துக் கொள்ளப்பட்டு, பின்னர் மூன்று ஆண்டுகளுக்குள் முதுகலை டிப்ளோமாவை பெற சமரசம் மூலம் முடிவு செய்துள்ளனர்.
2005 ஆம் ஆண்டு கூட இந்த வழியில் ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டதால், இப்போது அவ்வாறு செய்ய முடியும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
