சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்! இரட்டை உறுப்புரிமை தொடர்பில் டயனாவின் கணவர் வெளியிட்ட தகவல்
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை கொண்ட சில உறுப்பினர்கள் இன்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் (Diana Gamage) கணவர் சேனக டி சில்வா (Senaka de Silva) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்புக்கமைய, கட்சியின் உறுப்பினர் ஒருவர் இரண்டு கட்சிகளின் உறுப்புரிமைகளை கொண்டிருக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் (Colombo) இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, சேனக டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
எமது தேசிய முன்னணி
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “எமது தேசிய முன்னணி எனும் அரசியல் கட்சியின் தலைமைத்துவத்தை நான் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) வழங்கினேன்.
நான் சஜித் பிரேமதாசவிடம் கட்சியை ஒப்படைத்த போது, டயனா கமகே கட்சியின் செயலாளராக செயல்பட்டார்.
இதனை தொடர்ந்து, ரஞ்ஜித் மத்தும பண்டாரவுக்கு (Ranjith Madduma Bandara) குறித்த பதவியை வழங்குவதற்காக எனது மனைவி பதவி விலகியிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி
நானும் எனது மனைவியும் கட்சியை யாருக்கும் விற்பனை செய்யவில்லை. இலங்கை மக்களுக்காக சேவையாற்றவும் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்காகவும் இவ்வாறாக கட்சியின் பொறுப்பை வேறு தரப்பினருக்கு வழங்கினோம்.
எமது தேசிய முன்னணி எனும் கட்சியே ஐக்கிய மக்கள் சக்தியாக பின்னர் பெயர் மாற்றப்பட்டது.
இந்த நிலையில், கட்சியின் நிரந்தர உறுப்பினர்களான என்னையும் எனது மனைவியையும் யாராலும் கட்சியிலிருந்து நீக்க முடியாது.
சட்ட நடவடிக்கை
இந்த விடயம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த சட்ட ஆலோசனைகளை பெற்று வருகிறோம்.
அத்துடன், இந்த பிரச்சினை தீவிரமடையும் பட்சத்தில் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகியோரின் பதவிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் எதிர்வரும் அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசவால் போட்டியிட முடியாது” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |