பிரேத அறையில் யுவதியின் சடலத்திற்கு பாலியல் இழுக்கு...! மலையகத்தில் நேர்ந்த கொடூரம்
டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் முன் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (03.03.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால் பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிற்றூழியர்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த பெப்ரவரி மாதம் 25-ஆம் திகதி, ஹட்டன் – ஏபோட்ஸிலி தோட்டப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக அவரது சடலம் அன்றைய தினமே டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த பிரேத அறையில் பணியாற்றும் மூன்று சிற்றூழியர்கள் சடலத்திற்குப் பாலியல் ரீதியாக இழுக்கு ஏற்படுத்தியதாகத் தகவல் வெளியானதை அடுத்து, உயிரிழந்த பெண்ணின் உறவினர்களும் பொதுமக்களும் வைத்தியசாலைக்கு முன்பாகத் திரண்டுள்ளனர்.
எழுதப்பட்ட பதாகை
அங்கு, “வைத்தியசாலை நிர்வாகமே உண்மையை வெளிக்கொண்டு வா, குற்றவாளிகளைக் கைது செய்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வைத்தியசாலை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் வருகை தந்து நிலைமையை ஆராய்ந்தனர்.
சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த வைத்திய அதிகாரி வைத்தியர் பஷ்லி, “குறித்த சடலம் கடந்த 25-ஆம் திகதி வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டது. சடலம் வைக்கப்பட்டிருந்த நிலை குறித்து எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.
சட்ட நடவடிக்கை
இதனையடுத்துப் பிரேத அறையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்தோம்.
அதில் மூன்று சிற்றூழியர்கள் அநாவசியமான முறையில் பிரேத அறைக்குள் சென்று வந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பாக நாம் உள்வாரியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்," எனத் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று சந்தேக நபர்களையும் உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஹட்டன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |