யாழ்.ஊரெழுவில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவஞ்சலி
தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய இரு ஊர்திகளின் ஊர்தி பவனி யாழ் ஊரெழுவில் ஆரம்பமாகியுள்ளது.
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாளான இன்று ஊரெழுவில் அமைந்துள்ள அவர் பிறந்து வாழ்ந்த காணியில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஊர்தி பவனிகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகின.
இந்நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மக்கள் அஞ்சலி
இதன் பின்னர் அவ்விடத்தில் இருந்து இரு ஊர்திகளும் யாழ். பலாலி வீதியூடாக நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
இதேவேளை, அதே வழித்தடத்தில் அமைந்துள்ள விடுதலை போராட்டத்திற்காக தன் உயிரை தியாகம் செய்த பொன். சிவகுமாரின் யாழ் உரும்பிராயில் அமைந்துள்ள உருவச் சிலைக்கும் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் யாழ் நல்லூர் நோக்கி பயணிக்கும் இரு ஊர்திகளுக்கும் மக்கள் வீதியோரங்களில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
இவ் ஊர்தி பவனியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், நடராஜர் காண்டீபன் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேசசபை உறுபபினர் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







