ஷிரான் பாசிக்குடன் தொடர்புபடுத்தி போலி பிரசாரம்! சட்ட நடவடிக்கைக்கு விரைந்த திலகரத்ன டில்ஷான்
முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் டி.எம். டில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பொய்யான மற்றும் அவதூறான பதிவுகள் குறித்து கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
நாட்டிற்கு 20 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றித் தான் கட்டியெழுப்பிய நற்பெயருக்கு, இந்தத் தவறான தகவல்கள் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை திரும்பிய பின்னர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ள டில்ஷான், தனது பெயரைத் தூய்மைப்படுத்த நியாயமான மற்றும் விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
மேலும், பார்வையாளர்களை ஈர்ப்பதற்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ பொது நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தித் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்த்து, சமூக ஊடகப் பயனர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த அவதூறான பதிவுகளுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கத் தனது வழக்கறிஞர்கள் ஆயத்தமாகி வருவதாகவும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குச் சட்டரீதியான தீர்வுகளைப் பெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலக குற்றவாளி, ஷிரான் பாசிக்குடன் டில்ஷானை தொடர்பு படுத்தி சமூக ஊடகங்கள் பரப்பப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டே மேற்படி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |