இறந்தவர்களை அடக்கம் செய்ய யாரும் இல்லாத நிலை வரலாம் - உடன் நாட்டை முடக்குங்கள் - தேரர் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்டுவரும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த முடியவில்லை எனின் அரசாங்கம் ஒன்று தேவையில்லை என கடும்போக்குவாத சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா உட்பட ஏனைய பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியாது போனால் அரசாங்கம் தேவையில்லை. நாடு முழுமையாக முடக்கப்பட வேண்டும். இதனைத் தான் இப்போது செய்ய வேண்டி இருக்கின்றது. இது பிரச்சனை தான். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்.
ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த நிலைமையில் நாடு போனால் இதனை விட மோசமான முறையில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்.ஒரு மாதத்திற்கு நாடு முடக்கப்பட வேண்டும். ஆனால் யாரையும் வீதிகளில் இறங்க அனுமதிக்கக் கூடாது. அத்தியாவசிய சேவையை தவிர ஏனையவர்களை வீடுகளிலேயே முடக்க வேண்டும்.
மக்களுக்கான உணவுப் பொருட்களை இலவசமாக வழங்குங்கள். நாட்டில் கொரோனாவினால் ஏற்படும் மரணங்கள் எதிர்வரும் காலத்தில் 200, 300 தாண்டிச் செல்லும். இறந்தவர்களை தீ மூட்டவோ அல்லது புதைக்கவோ முடியாத நிலையை எதிர்கொள்ள வேண்டிவரும்.
எனவே நாட்டை முழுமையாக முடக்காது போனால் கொரோனாவை அழிக்க முடியாது. தற்போது நாட்டை முடக்காது போனால் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கே மனிதர்கள் இல்லாமல் போகும் நிலை ஏற்படும். மக்கள் வெளியில் வரப் பயப்படுவார்கள். அத்தகைய நிலமைக்கு நாட்டை தள்ளாது உடனடியாக நாட்டை முழுமையாக முடக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.