அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு முப்படையினர் தயார் நிலையில்
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலைக்கு மத்தியில் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு முப்படையினரும் தயாராகவே உள்ளனர் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பாரதூரமான அனர்த்தங்கள் ஏதும் இதுவரையில் பதிவாகவில்லை எனவும், அருண ஜயசேகர கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(22.10.2025) நடைபெற்ற அமர்வின்போது நாட்டில் நிலவும் மழையுடனான நிலைமை தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மழையுடனான காலநிலை
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
“நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் குருநாகல், அனுராதபுரம், காலி,கேகாலை, பதுளை, கண்டி, புத்தளம்,கொழும்பு, நுவரெலியா, வவுனியா, மொனராகலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 9500 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 67 பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடுமையான மழைவீழ்ச்சி மற்றும் மண்சரிவினால் அனுராதபுரம், கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.மேலும், ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கடும் காற்று
அத்தோடு, மழை மற்றும் கடும் காற்று, மண்சரிவு ஆகியவற்றால் 311 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதன்படி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 24 மணித்தியாலமும் சேவையில் உள்ளது.
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலைக்கு மத்தியில் பாரதூரமான அனர்த்தங்கள் ஏதும் இதுவரையில் பதிவாகவில்லை” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
