யாழ். அரியாலையில் தங்கிய இஷாரா - கைதுசெய்யப்பட்ட ஆனந்தன்: 5 லட்சத்துக்கு நடந்த கடத்தல்
இஷாரா செவ்வந்தி இந்தியா செல்ல உதவிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் இன்று அல்லது நாளை கைது செய்ய்ப்படுவார் என கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லும் ஒரு வலையமைப்பை அடையாளம் கண்டுள்ளது.
இந்த குழுவின் மூலம் கடந்த சில ஆண்டுகளில் குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உட்பட சுமார் 100 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
குழுவின் மூளையாகச் செயல்
இந்தக் கும்பலைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சகோதரர்களில் மூத்தவரான ஆனந்தன், இந்தக் குழுவின் மூளையாகச் செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் பிடிக்கப்பட்டு இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 6 பேரில் இஷாரா செவ்வந்தியும் ஆனந்தனால் இந்தியாவிற்குக் கடத்தப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவால் கைது
யாழ்ப்பாணத்தின் அரியாலையில் இருந்து இஷாரா செவ்வந்தி ஒரு மீன்பிடிப் படகில் ஏற்றப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டதுடன் அங்கு அழைத்துச் செல்ல அவரிடம் ரூ. 5 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அந்தப் பணத்தை ஜே.கே. பாய் கொடுத்தது தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் ஆனந்தன் என்ற கடத்தல்காரரின் இரண்டு வீடுகளில் தங்கியிருந்துள்ளார்
இஷாரா செவ்வந்திக்கு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் தங்குமிடம் வழங்கி நாட்டை விட்டு வெளியேற உதவிய நான்கு பேரும் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தங்குமிடம்
இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்கு எடுத்துச் சென்ற படகையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்தப் படகையும் ஆதாரமாக காவல்துறையினரின் காவலில் எடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு, ஆனந்தன் சகோதரர்களின் பாதுகாப்புடன் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு ஜே.கே. பாய் மற்றும் சிலோன் பாய் ஆகியோர் இந்தியாவில் தங்குமிடம் மற்றும் வசதிகளை வழங்குகிறார்கள்.
விசாரணையில், ஆனந்தனும் அவரது சகோதரர்களும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக காவல்துறையினரால் தேடப்படுபவர்களை இந்த வழியில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவும் வகையில் 500,000 முதல் 1000,000 ரூபாய் வரை வசூலிப்பது தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
