வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு
இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்களை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது போதைப் பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 25 பார்சல்களை ஆய்வு செய்த போது இந்த மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சுமார் 43 மில்லியன் ரூபா பெறுமதியான 2193 எக்ஸ்டசி என்ற மெத்தம்பெட்டமைன் மாத்திரைகளும், 1740 கிராம் குஷ் போதை பொருளும், 29 கிராம் ஆம்பெட்டமைன் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
மேலும், கொழும்பு, மஹரகம, பத்தரமுல்லை, பொரலஸ்கமுவ, பாணந்துறை, மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் முகவரிகளுக்கு ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தில் இருந்து இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.
ஆனால், விசாரணைகளில் அவை போலியான முகவரிகள் என தெரியவந்துள்ளது.
இந்த போதைப்பொருள்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |