சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை உடன்பாடற்ற நிலை - முன்னுக்குப்பின் முரணான கதை
சர்வதேச நாணய நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் உடன்பாடற்ற நிலையிலுள்ளதையே புலப்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை
“சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் அவற்றை வெளிப்படுத்துவதிலும் நேர்மை இல்லாத் தனத்தையே காணக்கூடியதாக உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் டிசம்பர், ஜனவரி மாதங்களாகும் போது நிதியைப் பெற்றுக் கொள்ளலாம் என ஒரு கட்டத்தில் கூறுகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு முன்னர் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உடன்படிக்கைக்கு வர வேண்டும் என அதிபர் மறுபக்கம் கூறுகிறார். இது சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் உடன்பாடற்ற ஒரு நிலையிலுள்ளதை புலப்படுத்துகிறது.
அரசாங்கத்தின் தலைவர்கள் சில சமயங்களில் முன்னுக்குப்பின் முரணான கதைகளைச் சொல்கிறார்கள். அதில் இருந்து என்ன தெரிகிறது. இப்போது ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தையே நம்புகிறார்.
முன்னுக்குப்பின் முரணான கதை
அதைவிடுத்து அவரிடம் எந்த வகையான வேலைத்திட்டமும் இருப்பதாக அரசாங்கம் கூறுவதாக இல்லை. ஆனால் இந்தக் கதைகளைப் பார்க்கும் போது, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் அந்தப் பயணமும் தெளிவில்லாமல் இருப்பதைக் காணலாம்.
சர்வதேச நாணய நிதியமாக இருந்தாலும் சரி, ஏனைய நாடுகளாக இருந்தாலும் சரி, நாட்டில் அரசியல் உறுதித்தன்மையை உருவாக்குவதே பிரதானமாக இருக்க வேண்டும் என்று ஆரம்பம் முதலே கூறி வந்தோம்.
ஏனெனில் இன்று நாட்டில் அரசியல் உறுதித்தன்மை இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்” - என்றார்.
