சர்வதேச நாணய நிதியத்துடனான சிறிலங்காவின் பேச்சுவார்த்தை தொடர்பில் ஜப்பானின் பார்வை!
சிறிலங்காவின் கடந்த அரசாங்கம், ஜப்பானின் சில முதலீடுகளை இரத்துச் செய்ததன் மூலம் சிறிலங்கா - ஜப்பான் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க வருத்தத்தை தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை ரணில் விக்ரமசிங்க டோக்கியோவில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சர்வதேச விவகாரங்களில் ஜப்பான் வழங்கி வரும் ஆதரவை பாராட்டியுள்ள ரணில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெறுவதற்கான ஜப்பான் மற்றும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் வரவேற்பு
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான சிறிலங்காவின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி வரவேற்றார்.
அத்துடன் சிறிலங்காவின் கடந்த அரசாங்கத்தால் இரத்துச் செய்யப்பட்ட சிறிலங்காவிற்கு மிகவும் அத்தியவசியமான அந்த திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க தமது அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன் போது ரணிலின் இந்த கருத்தை வரவேற்றுள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர், உலக அரங்கில் ஆசியாவின் பிரதிநிதித்துவம் விரிவுப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னணி வகிக்கத் தயாராகும் ஜப்பான்
இதேவேளை சிறிலங்காவிற்கான கடன் வழங்குநர்களுடன் நடத்தப்படும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஜப்பான் முன்னணி பங்கை வகிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் பயிற்சிகளை பெற்ற தொழிலாளர்களுக்காக அதிகமான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஜப்பான் ஆரம்பித்துள்ளது எனவும்வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கையில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி துறையில் ஜப்பானின் முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் ரணில் தெரிவித்த போது, ஜப்பான் இந்த விடயத்தில் ஆர்வம் கொண்டுள்ளது என ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜப்பான் இலங்கையில் எதிர்கால முதலீட்டு சந்தர்ப்பங்களை ஆராய விருப்பத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
