யுகதனவி ஒப்பந்தத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரிக்கை!
யுகதனவி மின் உற்பத்தி நிலைய பங்குகள் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து அடிப்படை உரிமை மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள அமெரிக்க நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சானக டி சில்வா (Sanaka de Silva) உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
இந்த மனுக்கள் நேற்றைய தினம் மீண்டும் பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போது, யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வைத்திருக்கும் அமெரிக்க நிறுவனம் சார்பில் முன்னிலையான அரச தலைவர் சட்டத்தரணி சானக டி சில்வா இந்த சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.
தொடரந்தும் அவர் வாதங்களை இவ்வாறு முன்வைத்தார்.
அமெரிக்க நிறுவனமான New Fortress Energy, திரவ இயற்கை எரிவாயு துறையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதாகவும், அந்நிறுவனம் பல்வேறு நாடுகளில் இதுபோன்ற பல திட்டங்களை செயற்படுத்தி வருவருகின்றது.
குறித்த நிறுவனம் உலகம் முழுவதும் இதுபோன்ற 14 திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.
இந்த உடன்படிக்கை தொடர்பில் பல அமைச்சரவை தீர்மானங்கள் உள்ளதாகவும் அதன் பிரகாரம் தனது சேவை பெறுநர் நிறுவனம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
வண.எல்லே குணவன்ச தேரர் மற்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் வசந்த சமரசிங்க உள்ளிட்டோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள், யுகதனவி மின் உற்பத்தி நிலையம், வெஸ்ட் கோஸ்ட் பவர் பிரைவேட் லிமிடெட், நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனம், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
