அரசின் செயலுக்கு துணை போகவேண்டாம் - விடுக்கப்பட்ட கோரிக்கை
கல்வி தனியார் மயமாக்கல் மற்றும் விலையேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை நசுக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எவரும் துணை போக வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
தான் உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சகல தேவைகளும் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட கருத்து உண்மையில்லை எனவும் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கு அருகில் நேற்றைய தினம், பத்தரமுல்லை, பொல்துவ சுற்றுவட்டம் அருகே தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் , பௌத்த துறவிகள் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பது பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிலையிலேயே மேற்கண்ட குழுவினர் கைதுசெய்யப்பட்டனர். எனினும், கைதானவர்கள் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தற்போது முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, சரியான உணவோ, குடிநீரோ அல்லது அணிவதற்கு உடையோ வழங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், குறித்த முகாமில் இருந்தவாறே ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், நீதிமன்ற உத்தரவையும் மீறி இடம்பெறும் அடக்குமுறைகளுக்கு கண்டனம் வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.