வைத்தியர் அர்ச்சுனா விடுதலை : நீதிமன்றம் உத்தரவு
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (archchuna ramanathan) நீதிமன்றினால் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தீர்ப்பானது இன்று (7.8.2024) மன்னார் (mannar) நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரண்டு சரீரப் பிணை
கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், கடந்த சனிக்கிழமை வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்தனர்.
இதனையடுத்து நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை, வைத்தியரை எதிர்வரும் 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், வைத்தியர் அர்ச்சுனா இன்று மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், நீதிபதியால் இரண்டு சரீரப் பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |