நீதி அமைச்சரின் கலாநிதி பட்ட விவகாரம் : சிஐடியில் முன்னிலையாகவுள்ள தரப்பினர்
இலங்கை நாடாளுமன்ற பணிக்குழாமின் அதிகாரிகள் சிலர் இன்று (15) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகவுள்ளனர்.
நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் (Harshana Nanayakkara) பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாடாளுமன்ற சபை ஆவண அலுவலகத்தின் உயர் அதிகாரி உட்பட சிலர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் பதிவு
அத்துடன் இதற்கு முன்னதாக, சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் உட்பட சிலர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
மேலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், நாடாளுமன்றத்திற்குச் சென்று அதன் அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு
எனினும், சபைத் தலைவர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட கடிதத்தின்படி, ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டதாக நாடாளுமன்ற சபை ஆவண அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற இணையத்தளத்தில் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாக அமைச்சர் சமீபத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |