சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் தொடர்பில் வைத்தியர்கள் எச்சரிக்கை!
வைத்தியரின் ஆலோசனை இன்றி சந்தையில் விற்பனை செய்யப்படும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளைப் பயன்படுத்த வேண்டாம் என தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (06.11.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தோல் புற்றுநோய்
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சருமத்தில் ஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும்.
சருமத்தின் நிறத்தில் திடீரென மாற்றங்கள் ஏற்பட்டால் கிரீம் வகைளை பூசாமல் வைத்தியர் ஒருவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
வைத்திய ஆலோசனை
சருமத்திற்கு நன்மை அளிக்கும் பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்கள் எமது நாட்டில் உள்ளன. எனவே அவற்றைத் தினமும் உண்ணுங்கள்.
திடீரென உடல் எடை அதிகரித்தால் வைத்தியரிடம் ஆலோசனை பெற்று ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.
தோலில் அரிப்பு, நிறம் மாற்றம், வெடிப்பு மற்றும் ஒவ்வாமை போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக வைத்தியரை கட்டாயம் நாடுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |