நெகிழ்ச்சி சம்பவம்: தரைமட்டமான கிராமம் - 67 பேரின் உயிரை காப்பாற்றிய நாய்
இந்தியாவின் (India) இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் 20ஆம் திகதி முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கன மழை காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர். 80க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் வெள்ளம் காரணமாக பூட்டு
7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும், அதேவேளை 225 வீதிகள் வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளன.
சம்பா, காங்க்ரா, மண்டி, குலு, சிம்லா, சோலன் மற்றும் சிர்மௌர் ஆகிய மாவட்டங்கள் தொடந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிலும் மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஜூன் 30 ஆம் திகதி நள்ளிரவு மண்டி மாவட்டத்தில் உள்ள தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது.
நாய் கடுமையாக குரைத்துள்ளது
இந்நிலையில், நிலச்சரிவிற்கு முன்பு நள்ளிரவில் அங்கிருந்த ஒரு நாய் கடுமையாக குரைத்துள்ளது. நாயின் சத்தத்தை கேட்டு கண் விழித்த வீட்டின் உரிமையாளர் வீட்டு சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வருவதை பார்த்துள்ளார்.
உடனடியாக அவர் அந்த நள்ளிரவில் அக்கிராமத்தில் உள்ளவர்களை எழுப்பி எச்சரித்துள்ளார். இதனால் கிராமத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர்.
பின்னர் சிறிது நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் உள்ள பல வீடுகள் தரைமட்டமாகின.
நாயின் சத்தத்தால் சியாதி கிராமத்தின் 20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
