போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம்..! ரஞ்சித் மத்தும பண்டார பகிரங்கம்
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பிரபாகரனைப் போன்றவர்கள் எனக் குறிப்பிட்டு , அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும், அவர்கள் விரும்பும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கும் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை
உள்ளுராட்சி தேர்தல் ஏற்கனவே ஓராண்டுக்கு காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. தற்போது மேலும் அதனை நீடிப்பதற்காகவே உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தலைக் காலம் தாழ்த்துதல் என்ற கசப்பான மருந்தை இனிப்பாக வழங்குவதற்காகவே உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாகக் கூறுகின்றனர்.
தற்போதுள்ள எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையோ அல்லது உள்ளுராட்சி உறுப்பினரையோ மக்கள் ஏற்க தயாராக இல்லை.
எனவே மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் , அவர்கள் விரும்பும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கும் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும்.
இது இவ்வாறிருக்க மறுபுறம் வரிகளை அதிகரித்து மக்கள் மீது பாரிய சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கின்றனர்.
தனவந்தரான தம்மிக பெரேராவிற்கும் , சாதாரண மக்களும் ஒரே அளவில் வரிகளை அறவிடுகின்றனர்.
அரச உத்தியோகத்தர்கள் கூட இந்த வரி அறவீட்டினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகரிக்கப்பட்டுள்ள வட்டி வீதங்கள்
வரிகள் ஒருபுறமிருக்க மறுபுறம் வட்டி வீதங்களையும் அதிகரித்துச் செல்கின்றனர்.
ஏற்கனவே வட் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அது தவிர சமூக பாதுகாப்பு வரி 1.5 வீதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் அரசாங்கம் , மறுபுறம் நிலக்கரி இறக்குமதி போன்றவற்றில் மோசடி செய்து கொண்டிருக்கிறது.
அதே வேளை இதற்கு முன்னர் இடம்பெற்ற எந்தவொரு மோசடிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவுமில்லை.
ஆர்ப்பாட்டத்திற்கு தமது பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோரை பிரபாகரனைப் போன்று செயற்படுகின்றனர் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
உரிமைகளுக்காக போராடும் மக்கள்
தமது ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம் என்று அதிபரை கேட்டுக் கொள்கின்றோம்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தற்போது பொதுஜன பெரமுன ஆட்டி வைக்கும் பொம்மையாகவே உள்ளார்.
நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கிய ராஜபக்ச குடும்பம் உள்ளிட்ட அனைவரையும் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றார்.
