சிறிலங்காவை மோசமான நாடாக சித்தரிக்காதீர்கள்: ரணில் சீற்றம் (காணொளி)
சிறிலங்காவை மோசமான நாடாக சித்தரிக்காதீர்கள் மேற்குலகின் மனநிலையுடன் எம்மை பார்க்காதீர்கள் என ரணில் விக்ரமசிங்க காட்டமாக தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட தகவல் தொடர்பாக தன்னிடம் எதுவும் கேட்கக்கூடாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜேர்மன் சென்ற அவர் அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர் காணலிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒருபோதும் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒருபோதும் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.இப்படி சம்பவம் அமெரிக்காவிலோ அல்லது வேறு மேற்கு நாடுகளிலோ இடம்பெற்றால் அந்த நாடுகளில் சர்வதேச விசாரணையை கேட்பீர்களா, ஆசியர்களாகிய எம்மை மட்டும் இரண்டாம் தர பிரஜைகளாக பார்க்கிறீர்களா எனவும் அவ்வாறான கேள்வியை ஏன் கேட்கிறீர்கள் எனவும் அதிபர் ரணில் கேள்வி எழுப்பினார்.
கேள்வி கேட்க அழைத்துவிட்டு, எங்களை சிறுமைப்படுத்துவது மேற்கத்திய நாடுகளின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாங்கள் அமைத்துள்ள விசாரணைக்குழுவில் மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என ஊடகவியலாளர் கேட்டதற்கு, மக்களுக்கு அதைப்பற்றி நாம் தெரிவிப்போம் நீர் யார் அதை கேட்பதற்கு எனவும் அவர் தெரிவித்தார்.
உண்மையான தரவுகள் இல்லாமல், மனித உரிமை மீறப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதை உரிய முறையில் தெரியப்படுத்தவும், வெளிவிவகார அமைச்சர் இந்த விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் ஆலோசனை முன்னெடுத்தும் வருகிறார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
