அடியோடு தகர்த்தப்பட்ட டக்ளஸின் அதிகாரகோட்டை: தமிழரசுக் கட்சிக்கு சிறீதரனின் சவுக்கடி
வடக்கின் அரசியல் களம் இன்று ஒரு பாரிய திருப்பத்தைச் சந்தித்திருக்கின்றது.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டிருக்கும் சூழலில் கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சி அவரோடு முன்னெடுத்த அரசியல் நகர்வுகள் இப்போது கூர்மையான விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
தேர்தல் காலத்தில் தமிழரசுக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து மிக நெருக்கமான அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க டக்ளஸின் ஒத்துழைப்பு தேவை என்பது போல ஒரு பிம்பம் அப்போது திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது.
இத்தகைய அரசியல் சமரசங்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் கட்சித் தலைமை அதனை ஒரு ராஜதந்திர நகர்வாகவே காட்டியது.
இருப்பினும், தமிழரசுக் கட்சிக்குள் இருந்துகொண்டே டக்ளஸின் அரசியல் முகத்திரையைக் கிழித்தெறிந்தவர்தான் சிவஞானம் சிறீதரன்.
கட்சித் தலைமை டக்ளஸுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்த போதே நேரடியாக நாடாளுமன்றத்தில் டக்ளஸின் ஆட்சி கால குற்றங்களை சிறீதரன் அம்பலப்படுத்தி கேள்விக்குட்படுத்தி இருந்தார்.
அதிகார வர்க்கத்தின் நிழலில் மறைக்கப்பட்ட கறுப்புப் பக்கங்களைச் சபையில் அவர் துணிச்சலுடன் வெளிச்சமிட்டுக் காட்டினார்.
இந்த நிலையில், சிறீதரன் அன்று முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் இன்று டக்ளஸின் கைதின் மூலம் மீண்டும் பாரிய பேசுபொருளாகியுள்ளது.
புங்குடுதீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசாரணைக்காகவும், இதர பணிகளுக்காகவும் டக்ளஸ் தரப்பினரால் அழைத்துச் செல்லப்பட்ட பல இளைஞர்கள் மீண்டும் திரும்பவில்லை.
இது தொடர்பில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? புங்குடுதீவின் பாழ்ங்கிணறுகளில் புதைந்து கிடக்கும் சிதிலங்கள் யாருடையவை என சிறீதரன் அன்று முன்வைத்த கேள்விகள், இன்று நீதிக்கான கேள்வியை எழுப்பியுள்ளது.
அன்று டக்ளஸின் அதிகார பலம் மற்றும் ஆயுதக் கலாச்சாரத்தின் அடக்குமுறை காரணமாக வாய்திறக்காமல் மௌனம் காத்த மக்கள், இன்று அவரது வீழ்ச்சியையும் கைதையும் கண்டவுடன் தங்களது மௌனத்தைக் கலைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையிரல், தற்போதைய அரசியல் சூழலில் மாற்றம் என்ற கோஷத்துடன் அதிகாரத்திற்கு வந்திருக்கும் புதிய அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்களின் இந்த நீண்டகால நீதிக்கான எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது
டக்ளஸ் தேவானந்தாவின் இந்த கைது நடவடிக்கை வெறும் கண்துடைப்பாக மட்டும் அல்லாது காலக் குற்றங்களையும் ஆராயுமாக இருந்தால் மக்களுக்கு அரசிக் மீதான நம்பிக்கை என்றும் தகர்க்க முடியாததாக உருவெடுக்கும்.
இவ்வாறு, புதைக்கப்பட்ட உண்மைகள் தோண்டி எடுக்கப்படும் பட்சத்தில் அது பல அரசியல் தலைவர்களின் முகமூடிகளைக் கிழிப்பதோடு டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் வாழ்விற்கு ஒரு முற்றுப்புள்ளியாகவும் அமையக்கூடும் என பலதரப்பட்ட விமர்சனங்கள் அண்மை காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது கீழுள்ள காணொளி.......!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |