நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ்
புத்தளம் மாவட்டம் கற்பிட்டி பிரதேச சபைக்குற்பட்ட கண்டக்குடா பிரதேசத்தில் கூட்டு வலைளைப பயன்படுத்தி இறால் பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த பிரச்சினைகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் ஏற்பாட்டில் இன்று கற்பிட்டி பிரதேச கற்றொழிலாளர்கள் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியதை தொடர்ந்து குறித்த தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற குறித்த சந்திப்பில், கடந்த 25 வருடங்களுக்கும் அதிகமாக குறித்த பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கூட்டு வலையைப் பயன்படுத்தி இறால் பிடிப்பதை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர் என அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடற்றொழில் திணைக்களத்தினால், அனுமதியற்ற முறையில் குறித்த தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சுமார் 400 இற்கும் மேற்பட்ட வலைகளை அகற்றி எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களினால் கடற்றொழில் அமைச்சரிடம் எடுத்துக் கூறப்பட்டது.
இதனையடுத்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சர், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தினை கருத்திற் கொண்டு, கடல் வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிபந்தளைகளுடனான அனுமதியை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
மேலும், கடற்றொழில் திணைக்களத்தினால் எடுத்துச் செல்லப்பட்ட மீனவர்களின் வலைகளையும் மீளப் பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது வாக்குறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.