முக்கியஸ்தர்களைக் கொன்ற விடுதலைப்புலிகளின் தலைவரைக் கொண்டாடும் தமிழ் கட்சிகள்!
தம்முடைய தலைவர்கள், சகாக்கள் யாரால் கொல்லப்பட்டார்களோ அவர்களையே தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் கொண்டாடிக் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் (20) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் உரையாற்றியதாவது, சக தமிழ் இயக்கங்களின் அரசியல் கட்சிகள் அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்ததாக கூறப்படுகின்ற பல குழுக்கள் இருப்பினும் அவை அரசியல் கட்சிகளாக பதிவில் இல்லாத காரணத்தால் ஏனைய சக இயக்கங்களினது அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் என பலரும் கொல்லப்பட்டமை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரால் தான் என்பதை இங்கு சுயபுத்தியுள்ள எவரும் மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன்.
அவ்வாறு கொல்லப்பட்ட தமது தலைமைகளுக்கும், சகாக்களுக்கும் மரியாதை செலுத்தி நினைவுகூரலை முன்னெடுக்காமல் யாரால் தம்முடைய தலைவர்கள், சகாக்கள், உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்களோ அவர்களை தொடர்ந்தும் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இவர்கள் தமது மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த வகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்