வெடுக்குநாறிமலையில் காவல்துறையினரின் அடாவடி : கடுமையாக சாடிய டக்ளஸ்
வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அடாவடித்தனம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிகாட்டியுள்ளார்.
குறித்த தகவலை அவர் இன்று(09) காலை திறப்புவிழா நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே தெரிவித்துள்ளார்.
இது குறித்து டக்ளஸ் மேலும் தெரிவிக்கையில், “இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் இன நல்லிணக்கதை சீர்குலைக்கும் வகையில் அமைகின்றது.
சிவராத்திரி
சிவராத்திரி தினம் என்பது இந்துக்களின் முக்கிய சமயம் சார் நிகழ்வென்பதுடன் இதனை முன்னிட்டு குறித்த ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள அடியவர்கள் சென்ற போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் நீதிமன்ற அனுமதியுடன் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவ பக்தர்களையும் மற்றும் அவர்களின் வழிபாட்டையும் அவமானப்படுத்தும் வகையில் காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் அவர்களது அடாவடித்தனமாகவே இருக்கின்றது.
அடாவடித்தனம்
ஆலய தரிசனம் செய்வது அவரவர் உரிமை என்பதனால் இதை தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது.
இவ்வாறான நிலையில் குறித்த ஆலயப் பகுதியில் காவல்துறையினர் இவ்வாறான தடைகளையும் அடாவடித்தனங்களையும் செய்வதற்கு யார் அனுமதி கொடுத்தது அதேநேரம் இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
அத்துடன் நடைபெறவுள்ள அமைச்சரவையிலும் இவ்விடயம் தொடர்பில் கொண்டு செல்லவுள்ளேன் என்பதுடன் இனிவருங்காலங்களில் காவல்துறையினர் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளாதிருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |