துல்லியமாக தாக்கின ஏவுகணைகள் : ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு : சிதறி கிடக்கும் சடலங்கள்
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனில் உள்ள பயிற்சி நிலையம் மீது நடத்தப்பட்ட இரண்டு ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 60 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூத்த தளபதியின் வருகைக்காக டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள தளத்தில் படையினர் கூடியிருந்தவேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வெளியான காணொளி காட்சிகளில் ஏராளமானோர் இறந்திருப்பதைக் காட்டுகிறது.
தாக்குதல் நடந்ததை உறுதிப்படுத்திய ரஷ்ய அதிகாரி
ஒரு ரஷ்ய அதிகாரி தாக்குதல் நடந்ததை உறுதிப்படுத்தினார், ஆனால் வெளிவரும் அறிக்கைகள் "மிகவும் மிகைப்படுத்தப்பட்டவை" என்று விபரித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவை சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
புடினுடனான கூட்டத்தில், ஷோய்கு, முன் வரிசையின் பல பகுதிகளில் ரஷ்ய படையினர் பெற்ற வெற்றிகளைக் தெரிவித்தார். மற்றும் அவ்திவ்கா நகரத்தை சமீபத்தில் கைப்பற்றியதைப் பற்றி பேசினார், ஆனால் டொனெட்ஸ்க் பகுதி சம்பவம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
இச்சம்பவத்தில் உயிர் பிழைத்த இராணுவ வீரர் ஒருவர், படையணியின் தளபதிகள் தங்களை திறந்தவெளியில் நிற்க வைத்ததாக கூறினார்.
சிதறி கிடக்கும் சடலங்கள்
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஹிமார்ஸ் ஏவுகணை அமைப்பில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளால் அவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டசின் கணக்கான வீரர்கள் இறந்து கிடப்பதை காணொளிகள் காட்டுகின்றன. குறைந்தது 60 பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Transbaikal ஆளுநர் அலெக்சாண்டர் ஒசிபோவ் தனது டெலிகிராம் சனலில் தாக்குதலை மறைமுகமாக உறுதிப்படுத்தினார், ஆனால் அது பற்றிய அறிக்கைகள் "தவறானவை மற்றும் மிகைப்படுத்தப்பட்டவை" என்று கூறினார்.
உயிர்ச்சேதம் குறித்த புள்ளிவிபரங்களைத் தராமல், சம்பந்தப்பட்ட அனைத்து வீரர்களின் குடும்பங்களுக்கும் முழுமையான மற்றும் துல்லியமான தகவல்கள் வழங்கப்படும் என்றார்."உதவி அல்லது ஆதரவு இல்லாமல் யாரும் விடப்பட மாட்டார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.
உக்ரைனிய அதிகாரிகளிடமிருந்து தாக்குதல் பற்றி இதுவரை எந்த தகவலும் வரவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |