சாரதி அனுமதிப்பத்திரம் பெறவந்தவர்களில் வெளியான அதிர்ச்சிகர தகவல்
சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப்பிப்பதற்கும் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வந்த 1213 பேரில் 145 பேர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன(Ajith Rohana) தெரிவித்தார்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிக்கைகளினால் இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும் போதைப்பொருள் பாவிக்கும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இவர்களில் பெரும்பாலானோர் லொறி சாரதிகள் எனவும் அவர்களில் 21 பேர் பஸ் சாரதிகள் எனவும் இது ஆபத்தான நிலை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு கிடைத்த தகவல்களின்படி, போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10% ஆக அதிகரித்துள்ளது.
போதைப்பொருள் பாவனையில் இதுவரை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பிடிபட்டுள்ள போதிலும், போதைப்பொருள் சாரதிகள் தொடர்பில் கவனம் செலுத்தாமையால் வீதிப் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் போதைக்கு அடிமையான சாரதிகளும் போதைக்கு அடிமையானவர்களும் பிடிபடுவார்கள் எனவும் தெரிவித்தார்.
