வறட்சியின் கொடூரம் விவசாயிகள் போராட்டத்தில்
உடவளவ நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு குறைந்து வருவதால் சமனல நீர்த்தேக்கத்திற்கு அருகில் நேற்று (05) விவசாயிகள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
உடவலவ நீர்த்தேக்கத்திற்கு சமனல குளத்தில் இருந்து போதியளவு நீர் கொள்ளளவை திறந்து விடுமாறு கோரிக்கை விடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை ,சமனல நீர்த்தேக்கத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு போதியளவு நீரை திறந்துவிடுமாறு கோரி விவசாயிகள் ஆரம்பித்துள்ள சத்தியாகிரகப் போராட்டம் இன்று 13ஆவது நாளாகவும் தொடர்கிறது. தண்ணீர் திறக்கும் வரை அந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என அவர்கள் கூறியுள்ளனர். அதன்படி இன்று சமனல நீர்த்தேக்கத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்து வரும் நீரின் அளவு

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தில் நீர் வற்றி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். வளவ மகாவலி பிரதேசத்தில் உள்ள 12,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நெல் வயல்களுக்கு உடவளவ நீர்த்தேக்கத்தின் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதுடன், இன்று நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு 1.4 வீதமாகவே காணப்படுகின்றது. இதனால் சுமார் 86,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சமனல குளத்திலிருந்து 20 நாட்களுக்கு மின்சார தடையின்றி நீர் விநியோகம் செய்ய முடியும் என நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று பொலனறுவையில் வைத்து தெரிவித்தார்.