கடலில் மூழ்கப் போகும் நாடு: நேசக்கரம் நீட்டும் அல்பானீஸ்
பசிபிக் கடற்பகுதியில் பவழப்பாறைகள் நிரம்பிய சிறு தீவுகளை உள்ளடக்கிய டுவாலு (Tuvalu) எனும் நாடு நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.
அதிகரிக்கும் உலக வெப்பமயமாதல், டுவாலுவுக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது.
உயரமான அலைகளாலும், கடல்நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருவதாலும் அங்கு வாழும் மக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறி வந்தது.
நேசக்கரம் நீட்டும் அல்பானீஸ்
தலைநகரமான ஃபுனாஃபுயுட்டி (Funafuti) பகுதி, 50 சதவீதம் விரைவில் நீரில் மூழ்கி விடும் என்றும் 2100 வருடத்திற்குள் 95 சதவீத நாடு நீருக்கடியில் சென்று விடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
தற்போது டுவாலு கடல் மட்டத்தை விட 15 அடி உயரத்தில் மட்டுமே இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதும் நின்று விட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் (Anthony Albanese) டுவாலு மக்களுக்கு ஆஸ்திரேலியாவில் புகலிடம் அளிக்கும் ஒப்பந்தம் ஒன்றை டுவாலு பிரதமர் காசியா நாடானோ (Kausea Natano) உடன் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், டுவாலு நாட்டிற்கு ராணுவ பாதுகாப்பையும் ஆஸ்திரேலியா அளிக்க ஒப்பு கொண்டுள்ளது.
ஆண்டுதோறும் டுவாலு நாட்டு குடிமக்கள் 300 பேருக்கு ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து, வேலை செய்ய அனுமதி அளிக்கும் விசா வழங்கப்பட உள்ளது.