கடலில் மிதந்து வந்த பாரிய போதைப்பொருள் : விசாரணையில் வெளியான தகவல்
தங்கலை கடற்கரையில் மிதந்து கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருள் தெஹிபலே என்ற குற்றவாளிக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இது தெரியவந்துள்ளது. அவர்கள் 24 முதல் 56 வயதுக்குட்பட்ட தெவுந்தர, தெவிநுவர, சுல்தானகொட மற்றும் கந்தர பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
சந்தேக நபர்களிடமிருந்து 19 கிராமுக்கு மேற்பட்ட ஐஸ், 40 குதிரைத்திறன் கொண்ட படகு, ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 05 கைபேசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சநதேக நபர்கள்
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொட்வில காவல்துறை போதைப்பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர், மேலும் மேலதிக விசாரணைகள் காவல்துறை போதைப்பொருள் அதிகாரி பிரதி காவல்துறை மா அதிபர் அசோக தர்மசேனவின் மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகின்றன.
தங்காலை ரெக்காவ கடற்கரையில் நேற்று இரவு மிதந்து கொண்டிருந்த 51 பொதிகளில் சுமார் 840 கிலோகிராம் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இதில் 670 கிலோகிராமுக்கு மேல் ஐஸ், 12 கிலோகிராமுக்கு மேல் ஹாஷ் மற்றும் 156 கிலோகிராமுக்கு மேல் ஹெரோயின் ஆகியவை அடங்கும்.
நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதைப்பொருள்
இதற்கிடையில், போதைப்பொருள் அடங்கிய சந்தேகத்திற்குரிய பையை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியது.
போதைப்பொருள் இருப்பை அரசு பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பித்து அறிக்கையை அழைக்க உத்தரவிடுமாறு காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விடுத்த கோரிக்கைக்கு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம அனுமதி அளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
