இவ்வளவு நாளும் எங்கே ஐயா போனீங்க..!
தற்போது நாட்டில் காவல்துறையினரின் சுற்றி வளைப்புகளும் கைதுகளும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
அதாவது பதில் காவல்துறை மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்ட நிலையில் நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை இல்லாமல் செய்யும் ‘யுக்தியா’ விசேட நடவடிக்கையாக இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் தடல்புடலாக கைதுகள் இடம்பெற்று வருகின்றன.இதனை எழுதும்போது 6500 பேர் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் பாதாள உலகத்தவர்கள் என கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளை இலக்கு வைத்து
அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளை இலக்கு வைத்து நடத்தப்படும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனரென தெரிவித்து 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று சாய்ந்த மருதுவில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கட்டாருக்கும் இலங்கைக்கும் இடையே போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட முக்கிய புள்ளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் வேடிக்கை என்வென்றால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவே காவல்துறை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதில் புதிதாக ஒரு காவல்துறை மா அதிபர் வந்துதான் உத்தரவு போட்டு இதனைச் செய்யவேண்டும் என்றில்லை.
அப்படியென்றால் முன்னர் இருந்தவர் இதற்கு எல்லாம் துணை போனவரா என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்பானதுதான்.
மக்களை காக்கவேண்டியவர்களே கொலைகாரர்களுடன் உடந்தையாக இருந்தால் நீதி நிலைநாட்டப்படுவது எங்ஙனம் என பொதுசனம் கேட்கிறது.
யாழ்ப்பாணத்தில் அதிபரின் வீட்டுக்குள் புகுந்த வாள்வெட்டுக்குழு
அண்மையில் யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபரின் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக்குழு அதிபர் மீது நடத்திய வாள்வெட்டில் அவரது கையில் மட்டும் 56 தையல்கள் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே சத்திரசிகிச்சை செய்து காலில் தகடு வைத்திருந்த இடத்திலும் வாள்வெட்டு.வைத்தியர்களின் புண்ணியத்தால் அவர் தப்பி பிழைத்துள்ளார்.
வலயக் கல்விப்பணிமனையோ கைவிரிக்கிறது. பாடசாலையில் அல்லது பாடசாலை விட்டு செல்லும்போது நடந்தால் தாம் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் வீட்டில் நடந்தால் தாம் பொறுப்பு ஏற்கமாட்டோம் என்கிறது.
அதிபர் பாடசாலைக்கு வர அச்சத்துடன் உள்ளார்.
அப்படியென்றால் நீதியை நிலை நாட்டுவதாக காட்டுபவர்கள் எங்கே..! அந்த வாள்வெட்டு கும்பலை பிடிக்க முடியாமைக்கான காரணம் என்ன..! விடையில்லா கேள்விகள் பல ....