மத்திய தபால் பரிமாற்றகத்தில் சிக்கிய பல கோடி பெறுமதியான போதைப்பொருட்கள்!
வான்வழி தபால் பொதிகள் மூலம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு அனுப்பப்பட்டிருந்த பல கோடி பெறுமதியான போதைப்பொருள் தொகுதி ஒன்று சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
6 கோடியே 2 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் (60,265,000) பெறுமதியான குறித்த போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய்லாந்து, ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலி முகவரிகளுக்கு, குஷ், ஹஷீஷ், கொக்கைன் மற்றும் எக்ஸ்டசி ஆகிய போதைப்பொருட்கள் 9 பொதிகளில் அடைக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்தன.
சுங்கத்துறையினரால் கைப்பற்றல்
இந்த பொதிகளைப் பெற்றுக்கொள்ள எவரும் வராததால், அந்த முகவரிகள் குறித்து ஆராய்ந்த போது அவை போலி முகவரிகள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, நேற்று (28) பிற்பகல் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் மத்திய தபால் பரிமாற்றகத்தின் தபால் துறை அதிகாரிகளின் முன்னிலையில் அந்த பொதிகள் திறக்கப்பட்டன.
இவ்வாறு சுங்கத்துறையினரால் பொறுப்பேற்கப்பட்ட இந்த போதைப்பொருள் தொகுதி, மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |