நுவரொலியா மாவட்டத்தில் முற்றாக முடங்கிய சமையல் எரிவாயு விநியோகம்!
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக லாஃப்ஸ் சமையல் எரிவாயு (Laugfs Gas) விநியோகம் முற்றாக முடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் பிரதேசத்தின் எரிபொருள் விநியோகஸ்தர்களும் நுகர்வோரும் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை, மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவ ஆகிய முக்கிய நகரப் பகுதிகளில் இந்நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
கடுமையான கோரிக்கை
இந்தநிலையில் அப்பகுதியிலுள்ள லிட்ரோ (Litro Gas) விநியோகஸ்தர்களும் வாடிக்கையாளர்களின் கடுமையான கோரிக்கைகளை ஈடுசெய்ய முடியாமல் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
லாஃப்ஸ் நிறுவனத்தினால் கடந்த இரண்டு மாதங்களாக எவ்வித சமையல் எரிவாயு சிலிண்டர்களும் சந்தைக்கு விடுவிக்கப்படவில்லை.

இதனால் வீட்டுப் பாவனைக்காக லாஃப்ஸ் சமையல் எரிவாயுவை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், அன்றாட சமையல் தேவைகளுக்கான எரிபொருளைப் பெற முடியாமல் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக முகவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
லாஃப்ஸ் சமையல் எரிவாயு முகவர் உரிமையைப் பெறுவதற்காகவும் மற்றும் எரிவாயு நிரப்பப்படாத சிலிண்டர்கள் (Empty Cylinders) பெற்றுக்கொள்வதற்காகவும் விநியோகஸ்தர்கள் லட்சக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்துள்ளனர்.
எரிவாயு விநியோகம்
எனினும் தற்போது எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் செய்த முதலீட்டிற்கு எவ்வித வருமானமோ பயனோ கிடைக்காமல் நிதி நெருக்கடியிலும் தீவிர விரக்தியிலும் மூழ்கியுள்ளனர்.
லாஃப்ஸ் நிறுவனம் சிலிண்டர்களை விநியோகிக்காத நிலையில் மறுபுறம் லிட்ரோ கேஸ் நிறுவனமும் புதிய சிலிண்டர்களை சந்தைக்குப் போதுமான அளவு விடுவிக்கவில்லை.

இதன் காரணமாக லாஃப்ஸ் சிலிண்டர்களை வைத்துள்ள வாடிக்கையாளர்களால் லிட்ரோ எரிவாயு பெய முடியாத முட்டுக்கட்டை நிலை உருவாகியுள்ளது.
இவ்விநியோகச் சீர்கேடு குறித்துத் தெளிவுபடுத்துவதற்காக லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முகவர்கள் பலமுறை முயன்ற போதிலும் எந்தவொரு அதிகாரியும் உரிய பதிலையோ விளக்கத்தையோ வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் விநியோகச் சிக்கல்கள் எப்போது தீர்க்கப்படும் என்பது தெரியாமல் முகவர்களும் நுகர்வோரும் தீவிர கவலையிலும் நிச்சயமற்ற நிலையிலும் தவிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |