கடல்வாழ் உயிரினங்களுக்கு யமனாக உருவெடுத்து வரும் துபாயின் செயற்கைத் தீவுகள்!
சுற்றுலாத்துறை வாயிலாக அதிக வருமானம் ஈட்டும் நாடுகளின் வரிசையில் தனக்கென்ற முத்திரையினைப்பதித்த நாடு துபாய், புர்ச் கலிஃபா,முதல் கடலில் செயற்கை தீவுகள் என துபாய் கொண்டுள்ள அதிசயங்களுக்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வரிசையில் துபாயின் செயற்கைத் தீவுகளின் தன்மையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றன.
இதனால் கடலின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு, கடல் வாழ் உயிரினங்கள் ஆபத்தை சந்தித்து இருப்பதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
21ம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு பிறகு அதி தீவிர வளர்ச்சியை கண்ட நாடுகளில் முதலிடத்தில் இருப்பது துபாய்.
பொருளாதார ரீதியான முன்னேற்றம்
துபாயினுடைய அதிதீவிர வளர்ச்சி, உலக நாடுகளை ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளை நடுங்கச் செய்து இருக்கிறது.
அந்த அளவிற்கு பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை துபாய் கண்டு வருகிறது.
அதேநேரம் துபாயினுடைய உள்நாட்டு மக்கள் தொகை குறைவாக இருப்பதால் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் துபாயில் குடியேறி வருகின்றனர்.
மேலும், உலக கோடீஸ்வரர்களில் மிகப்பெரும்பான்மையானோர் துபாயில் தங்களுக்கென்று ஆடம்பர வீடுகளை அமைத்தும் உள்ளனர்.
இப்படி துபாயை நோக்கி படையெடுக்கும் உலக மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், துபாயில் புதிய நிலப்பரப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்ட துபாய் அரசு, 2000ம் ஆண்டு துபாயின் கடற்கரைப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குட்டி தீவுகளை அமைக்க முடிவு செய்தது.
இதற்கான பணியை துவங்கிய தனியார் நிறுவனம் ஒன்று, பாம்ஸ் தீவுகளுக்கு அருகே 300 குட்டி தீவுகளை கொண்ட, ‘தி வேர்ல்ட்’ என்று பெயரிடப்பட்ட தீவுக்கூட்டத்தினை உருவாக்கி வருகிறது.
மிகப்பெரிய வர்த்தக நடவடிக்கை
மண்ணையும், பாறைகளையும் தொன் கணக்கில் ஒரே இடத்தில் குவித்து, உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த செயற்கைத் தீவுக் கூட்டத்தில் ஒரு தீவினுடைய விலை பல லட்சம் கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்படி துபாய் அரசின் மிகப்பெரிய வர்த்தக நடவடிக்கையான இந்த செயற்கை தீவுக் கூட்டத்தின் காரணமாக கடல் தன்மையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து இருப்பதாக சர்வதேச சுற்றுச்சூழலுக்கான அமைப்பு தெரிவித்திருக்கிறது.
மேலும், துபாயில் கடல் நீர் ஓட்டம் மாற்றத்தைக் கண்டிருப்பதாகவும், இதன் காரணமாக காற்று அடிக்கும் திசையில் மாற்றம், மழைவீழ்ச்சியில் மாற்றம் எனப் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதுமாத்திரமல்லாமல், கடலில் வெப்பத்தின் அளவு அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது, இதை உருவாக்க மேற்கொண்ட முயற்சியின் காரணமாக உருவான கழிவுகளால் ஏராளமான கடல் வாழ் உயிரினங்களும் அழிவடைந்துள்ளது.
ஆழ்கடல் உயிரினங்கள் வேறு பகுதியை நோக்கி இடம்பெயர்கின்றன, மேலும், பவளப்பாறைகள் முற்றிலுமாக அந்தக்கடல் பகுதியில் இருந்து அழிக்கப்பட்டிருக்கின்றன,
இப்படி பல்வேறு வகையான அழிவுகளை இந்தக் கடல் சந்தித்திருக்கிறது என்றும் தெரிவித்திருக்கின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |