கைதான துமிந்த சில்வா தொடர்பில் வெளியான தகவல்
தொடர்ந்தும் வைத்தியசாலையில் துமிந்த சில்வா
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தொடர்ந்தும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக திணைக்கள பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
பரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்டோரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.
வலிப்பு நோய்
அரச தலைவரின் தீர்மானத்திற்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் உட்பட பல தரப்பினரும் உயர் நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம், துமிந்த சில்வாவை அரச தலைவரின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க தடை உத்தரவு பிறப்பித்ததுடன், அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசர நிலை காரணமாக துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
துமிந்த சில்வா வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
