யாழ்.மாவட்ட தற்போதைய நிலைமைகள் :அரச அதிபரிடம் விரிவாக கேட்டறிந்த நெதர்லாந்து தூதுவர்
நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் H. E. Wiebe De Boer, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை இன்றையதினம் (21.01.2026) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில் மீள்குடியேற்ற நிலைமைகள், இந்தியாவிலிருந்து மீளக்குடியமர்ந்த குடும்பங்கள் மற்றும் மீளக்குடியமரவுள்ள குடும்பங்கள் தொடர்பாகவும், அக் குடும்பங்களின் வாழ்வாதார நிலைப்பாடுகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார்.
பல்வேறு விடயங்கள் குறித்து கேட்டறிவு
விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் அத் துறைகளின் நவீனமயமாக்கல் தொடர்பாகவும், மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார நிலவரங்கள், தீவக அபிவிருத்தி குறிப்பாக முதலீட்டு வாய்ப்புகள் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் டித்வா புயல் பாதிப்புக்கள் தொடர்பாகவும் அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார்.

மேலும், யாழ்ப்பாண கோட்டை தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களிடம் வினவிய போது, தற்போது யாழ்ப்பாண கோட்டை சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளதாகவும், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாவிகள் அதிகம் வருகைதரும் இடமாகவும், தொல்லியல் திணைக்களம் மற்றும் சுற்றுலா அமைச்சுடன் இணைந்த வகையில் யாழ்ப்பாண கோட்டை அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் உள்பகுதியில் சுற்றுலாவிகளை கவரக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடுகளை உயர்ஸ்தானிகருக்கு அரசாங்க அதிபர் விபரித்தார்.
யாழ்ப்பாண கோட்டை அபிவிருத்தி
இதன்போது கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாண கோட்டை அபிவிருத்தி சம்பந்தமாக அக்கறை செலுத்தி பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் தீவுப் பகுதி சுற்றுலா அபிவிருத்தி குறிப்பாக நெடுந்தீவு பிரதேச சுற்றுலா அபிவிருத்தி தொடர்பாகவும் அரசாங்க அதிபரால் விளக்கமளிக்கப்பட்டது.
இச் சந்திப்பில் உயர்ஸ்தானிகர் நெதர்லாந்து தொடர்பான ஆவணப் புத்தகத்தை அரசாங்க அதிபரிடம் கையளித்தார். இச் சந்திப்பில் நெதர்லாந்து உயர்ஸ்தானியகத்தின் அரசியலுக்கான சிரேஷ்ட ஆலோசகர் நாமல் பெரேரா , கலாசார ஆலோசகர் கிறைசனி இருவரும் மெண்டிஸ் உடனிருந்தார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |