நேபாளத்தில் நிலநடுக்கத்தின் கொடூரம் : வீடின்றி பரிதவிக்கும் மக்கள்
நேபாளத்தில் கடந்த 03ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 2 இலட்சம் பேர் வீடின்றி பரிதவிப்பதாகவும் கடும் குளிரில் திறந்தவெளியில் தூங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளதுடன் 400இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இரு மாவட்டங்களிலும் பெரும்பாலான வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளன.
அத்துடன் நிலநடுக்கம் இடம்பெற்ற பகுதிகளில் இதுவரை 159 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு செல்ல மக்கள் அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திறந்த வெளியில் தூங்கினர்
சுமார் 2 இலட்சம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து திறந்தவெளியில் பரிதவிக்கின்றனர். நேபாளத்தில் குளிர் காலம் தொடங்கியுள்ளதவும் கடும் குளிரைப் பொருட்படுத்தாமல் கடந்த சனிக்கிழமை ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்ட மக்கள் திறந்தவெளியில் தூங்கினர்.
வீடுகளை இழந்த மக்களுக்காக நேபாள அரசு சார்பில் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் அவை போதுமானதாக இல்லை.
நேபாள பிரதமர் பிரசண்டா தலைமையில் நேற்று (05) அமைச்சரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதேவேளை கட்டிட இடிபாடுகளில் இருந்து கடைசி நபர் மீட்கப்படும் வரை மீட்புப் பணி தொடரும் என்று பிரதமர் பிரசண்டா உறுதிபடத் தெரிவித்தார்.
துணைப் பிரதமர் விஜயம்
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 இலட்சம் இழப்பீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் படுகாயம் அடைந்த அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் எனவும் , அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் தலைநகர் காத்மாண்டுக்கு அழைத்து வரப்படுவர் என்று மூத்த அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
காத்மாண்டுவில் இருந்து ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்டங்களுக்கு இலவச பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு இலவசமாக தொலைத்தொடர்பு சேவையும் வழங்கப்படுகிறது.
நேபாள துணைப் பிரதமர் நாராயண் நேற்று நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தார்பாலின், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை அவர் வழங்கினார்.
சர்வதேச நாடுகள் நிவாரண உதவி
நேபாள தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரேகா சர்மா, கூறும்போது, “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உணவு தானியங்கள், மருந்து பொருட்கள், நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிவாரண உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.
நட்பு நாடுகள் உட்பட சர்வதேச நாடுகளின் நிவாரண உதவிகளை ஏற்றுக் கொள்ள நேபாள அரசு முடிவு செய்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 13 மணி நேரம் முன்
