உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள் : பிரசன்ன ரணதுங்க
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் உணர்வுப்பூர்வமானது.ஆகவே அதை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
சமயம்,மத வாத முரண்பாடுகள்
“நாட்டில் சில காலமாக இனவாதம் தலைதூக்கியுள்ளது. தற்போது, சமயம்,மத வாத முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தாதீர்கள்.என்னிடம் இனவாதம் இல்லை.நான் தமிழ் பெண்ணை மணந்துள்ளேன்.
83 கறுப்பு ஜூலையின் போது, என்னால் என் மனைவியுடன் வெளியே செல்ல முடியவில்லை. இனவாதத்தையும் மதவெறியையும் தூண்டும் வகையில் செய்த கேடுகெட்ட வேலைகளையே, இன்று நீங்கள் (எதிர்தரப்பினர்) செய்கிறீர்கள்.
தேர்தலின் போது பகலில் சிங்களவர் வீட்டில் சோறும், இரவில் தமிழர் வீட்டில் தோசையும், வடையும் சாப்பிடுகிறார்கள் என்று என்னிடம் கேலி செய்தார்கள்.
நான் மக்களுக்காக அரசியல் செய்கிறேன், என் மனைவிக்காக அல்ல. என் மனைவி தமிழ் என்பதற்காக மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் நான் அரசியலில் இருந்து விலகுவேன்.
அது வேறு விஷயம். இது ஒரு உணர்வுபூர்வமான விடயமாகும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளோம்.
சனல் 4
2019 மே மாதம் மூன்று நாட்கள் இதைப் பற்றி பேசினோம். 2021 மார்ச் இல் மூன்று நாட்கள் பேசப்பட்டது. 2021 ஏப்ரல் இல் மூன்று நாட்கள் பேசப்பட்டுள்ளது. இன்று ஏன் மீண்டும் பேசுகிறோம்? இது மீண்டும் சனல் 4 பிரச்சினையுடன் வந்துள்ளது.
சனல் 4 இல் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி உண்மையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இலக்காகக் கொண்டது இல்லை என்று நான் நம்புகிறேன்.
இந்த முழு நிகழ்ச்சியின் ஐந்தில் ஒரு பங்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றியது. ஐந்தில் நான்கு போரைப் பற்றியது.
ஜெனிவாவில் பேசவதற்காக விடுதலைப் புலிகளின் அபிமானிகளால் கொண்டு வந்த சனல் 4 வின் விளம்பரமே இது. இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்றை நியமிக்குமாறு அதிபரிடம் கோருகின்றீர்கள்.
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழுவொன்றை அதிபர் நியமித்துள்ளார். இந்த குழுக்கள் மீது நம்பிக்கை இல்லை என்று தற்போது எதிர்தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். இதில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாம். எல்லா இராணுவ அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல.
ஒன்றிரண்டு இருந்தால் உங்களால் பேச முடியும். நாங்கள் தேர்வுக் குழுவை முன்மொழிந்தோம்.
இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார். நீங்களும் அந்தக் குழுவுக்கு வரலாம். அதில் ஆணைக்குழு அறிக்கைகள் பற்றி பேசுங்கள். இங்குள்ள எங்களில் யாருக்கும் இதில் நிபுணத்துவம் இல்லை.
இந்த விசாரணைகளை சரியான இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பேசி வருகிறோம். இது நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது.
புலனாய்வுத் துறை, இராணுவம், காவல்துறையை விமர்சித்து அவர்கள் மீது நம்பிக்கை இழந்தால் அது நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதிக்கும். சம்பந்தப்பட்டவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்களைக் கூறுவோம்.
2019 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்த பின்னர் சாட்சிகள் நாட்டை விட்டு வெளியேறும் வரை ஏன் காத்திருந்தீர்கள்? அப்போது இன்று எதிர்க்கட்சியில் இருப்பவர்களே ஆட்சியில் இருந்தார்கள்.
இந்தத் தாக்குதலுக்கு தனிப்பட்ட அரசியல் கட்சிகளையோ, தனிநபர்களையோ குற்றம் சொல்ல வேண்டாம். பிள்ளையான் விடுதலைப் புலிகளில் இருந்தவர். தலதா மாளிகையைத் தாக்கும் போது அவர் அங்கே இருந்தார்.
புலிகள் அமைப்பு பலவீனமடைந்தது அதன் பிரிவுகள் உடைந்து அரசாங்கத்திற்கு தகவல் கொடுத்ததால்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எதிர்க்கட்சித் தலைவரின் தந்தை அதிபராக இருந்தபோது புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கினார். அது ஒரு போர் தந்திரமாக இருக்கலாம். அதற்கு எதிராக நான் ஒருபோதும் பேசமாட்டேன்.” என்றார்.