நாட்டின் தலைமை மீது நம்பிக்கை கொள்ள முடியாது - கொழும்பு பேராயர்
மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மனித மேன்மையையும் அழித்து, ஏகாதிபத்தியத்துடன் மக்களின் இறையாண்மையை எட்டி உதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாட்டின் தலைமையின் மீது இன்று நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று நடைபெற்ற விசேட ஆராதனையின் பின்னர், கொழும்பு பேராயர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கம் தயங்குவது ஏன்?
''நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொடூரத் தாக்குதலால், உயிர்களும் உடைமைகளும் அழிக்கப்பட்டு, நாட்டின் முன்னேற்றத்தில் பேரழிவை ஏற்படுத்தியது.
நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறையின் வீழ்ச்சிக்கும் பொருளாதார சீர்குலைவிற்கும் அந்த தாக்குதலே வழிகோலியது.
தாக்குதல் தொடர்பான அதிபர் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களமும் காவல்துறையினரும் தயக்கம் காட்டி, பகிரங்கமாக முதலைக் கண்ணீர் சிந்துகின்றனர். நேர்மையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்குவது வேதனையளிக்கிறது.
இரட்டைக் கொள்கை
அரச தரப்பின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையிலான இடைவெளி தெளிவாக புலப்படுகிறது.
கத்தோலிக்க திருச்சபையுடன் நேர்மையான பேச்சுவார்த்தைக்கு தயார் என அண்மையில் அறிவித்த தற்போதைய அதிபரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் இரட்டைக் கொள்கையை கடைப்பிடிக்கின்றார்களா என்ற கேள்வி தமக்குள்ளதாகவும் அவர் கூறினார்.
