நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மைத்திரிக்கு அழைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட வழக்கில் சந்தேக நபராக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை பெயரிட நீதவான் திலின கமகே தீர்மானித்துள்ளார்.
தனிப்பட்ட முறைப்பாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் சிறிலங்காவின் முன்னாள் அதிபருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 298 பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தனிப்பட்ட முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அவரது அலட்சியத்தால் குறித்த தாக்குதலில் மரணங்கள் சம்பவித்ததாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், அதிபர் சட்டத்தரணி ரியன்சி அர்செகுலரத்ன தலைமையில் சட்டத்தரணிகளான தேஜித கோரலகே, உதார முஹந்திரம்கே மற்றும் திலின புஞ்சிஹேவா ஆகியோர் முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்னிலையாகி வாதங்களை முன் வைத்த நிலையிலேயே, மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பாணை அனுப்பட்டது.
இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி குறித்த வழக்குக்காக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பாணை அனுப்பியுள்ளது.

