ஹேமசிறி, பூஜித் வழக்கு : பிரதிவாதிக்கு அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ (Hemasiri Fernando) மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர (Pujith Jayasundara) ஆகியோரின் வழக்கின் பிரதிவாதிக்கு அழைப்பாணை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குறிப்பிட்ட புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த போதிலும், ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் கடமை தவறியமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.
உயர் நீதிமன்ற அமர்வு
சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் மீதான நீண்ட விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மேல்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பிரதிவாதி சாட்சியத்தை அழைக்காமலேயே குறித்த பிரதிவாதிகள் இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
மேன்முறையீட்டு மனு
மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனவும் அதனை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பித்திருந்தார்.
விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்ற அமர்வு, விசாரணையின் போது பிரதிவாதிக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அதன்படி இந்த தீர்ப்பு அறிவிக்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |