தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் சார்ள்ஸின் பதவி விலகல் உறுதியானது
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் பதவி விலகலை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளதாக அதிபரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இன்று ரணில் விக்ரமசிங்க அவரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பில் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அண்மையில் அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
சார்ள்ஸின் பதவி விலகல்
எவ்வாறாயினும், இதனை அதிபர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதோடு இது தொடர்பில் கடந்த சில நாட்களாக அதிபர் மௌனம் காத்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது சார்ள்ஸின் பதவி விலகலை அவர் ஏற்றுக் கொள்வதாக அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளளார்.
இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
