நாட்டின் பொருளாதாரக் கொலைகாரர்கள் யார்..! வெளிப்படுத்திய எதிரணி
எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நீதிமன்றத்தைப் பயன்படுத்தி, நாட்டின் பொருளாதாரக் கொலைகாரர்கள் யார் என்பதை நிரூபிக்க முடிந்தத்தாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று (15) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு நாட்டின் சட்டத்தை பயன்படுத்தி திருடர்களை எப்படி பிடிப்பது என்பதை நடைமுறையில் கற்றுத் தந்தோம் எனவும் கூறியுள்ளார்.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரவலம்
அவர் மேலும் உரையாற்றுகையில், “நாட்டின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட வங்குரோத்து நிலையில் நாட்டு மக்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, மக்கள் போராட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பன தெளிவுபடுத்தியுள்ளன.
இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவித்திக்கான ஆய்வு மையத்தைச் சேர்ந்த மிக் மூர், இந்த பேரவலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
அப்போது பிரதமராக இருந்த தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் இதே கருத்தை வெளிநாட்டு ஊடக அலைவரிசை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பின்னர் ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்ற பின்னர், இந்தப் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்திய தரப்பினரை ஒன்று திரட்டி தெரிவுக்குழுவை நியமித்தார். எதிர்க்கட்சிகள் இதிலிருந்து விலகிய போதிலும், குறித்த தெரிவுக்குழு இன்னமும் செயற்பட்டு வருகிறது.
இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்களை ஐக்கிய மக்கள் சக்தி நீதியின் முன் நிறுத்தியிருக்கிறது .
உயர் நீதிமன்றம் நேற்று(14) தனது தீர்ப்பை அறிவித்தது, இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக மாறியிருக்கிறது.
பொருளாதாரக் கொலைகாரர்கள்
4 நீதிபதிகளில் 3 பேர் கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச,பசில் ராஜபக்ச, அஜித் நிவார்ட் கப்ரால்,டபிள்யூ.டி.லக்ஷ்மன்,பி.பி. ஜயசுந்தர மற்றும் ஆடிகல போன்றவர்களோடு நிதிக்குழுவும் இந்நாட்டின் வங்குரோத்து நிலையை ஏற்படுத்தியதாக தீர்ப்பளித்துள்ளது.
பொதுமக்களின் நம்பகத்தன்மையை மீறிய இவர்களே பொருளாதாரக் கொலைகாரர்கள். இதனை வெளிப்படுத்த காரணமான ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் பேரவை மற்றும் சட்டத்தரணிகளுக்கு எனது நன்றிகள்.
ஒட்டுமொத்த சமூகமும், ஒவ்வொருவரும், வங்குரோத்து தன்மையால் வாழ்வாதாரம் அழிந்த தரப்பினர் போன்றவர்கள், பொருளாதார அழிவின் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட பாராபட்சத்திற்கு இந்த நபர்களிடம் இழப்பீடு கோரலாம்” - எ்ன்றார்.