பொருளாதார மறுசீரமைப்பு நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் : சாகல கருத்து
நீண்டகாலமாக தாமதப்படுத்தப்பட்ட நாட்டுக்குத் தேவையான பல பொருளாதார மறுசீரமைப்புகள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இவ்வாறான திட்டங்கள் அரசியல் ரீதியாக பாதகமானதாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் அதிபரின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தேர்தலை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களே நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க, தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார சீர்திருத்தங்களின் பலன் இன்றே கிடைக்காவிட்டாலும், நாட்டின் இளைஞர் யுவதிகளும் எதிர்கால சந்ததியினரும் அதனால் பயனடைவர் என்று உறுதியளித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்த போதிலும், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவை ஒப்பிடுகையில் மக்களின் வருமானம் போதிய அளவில் அதிகரிக்கவில்லை, அதனால் அனைத்து துறைகளையும் மறுசீரமைப்புச் செய்து அரசாங்கம் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் சிறிய மற்றும் நடுத்தர திட்டங்களை செயற்படுத்துவதற்கான நிதி இவ்வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நிர்மாணத்துறையை பலப்படுத்துவதால் மீண்டும் பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதால் அதற்கு அவசியமான வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |