EDCS பல்கலைக்கழக மாணவர் 15,000 கொடுப்பனவு...! வெடித்த சர்ச்சை
கல்விச் சேவையில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கல்வி ஊழியர் சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கத்தின் (EDCS) நிதி நிர்வாகம் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் அசோக சந்திரசேகர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ள சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படவுள்ள 15,000 ரூபாய் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக தொலைதூரப் பிரதேசங்களில் உள்ள மாணவர்களும் கொழும்புக்கு வருமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
பயணச் செலவு
இவ்வாறு கொழும்புக்கு வந்து செல்வதற்கு ஒரு மாணவருக்கு பயணச் செலவாகவே 10,000 ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவாகுவதாக அசோக சந்திரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

2023-2024 கல்வியாண்டில் உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கான இந்த உதவித்தொகை வழங்கும் நிகழ்வை, இம்முறை பிரதமரின் தலைமையில் அலரி மாளிகையில் நடத்துவதற்குச் சங்கத்தின் தற்போதைய நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், குறித்த உதவித்தொகை என்பது உறுப்பினர்களின் உரிமை எனவும் அதனை வழங்குவதற்கு இவ்வாறானதொரு பிரம்மாண்ட விழாவை ஏற்பாடு செய்வது உறுப்பினர்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தும் செயலாகும் எனவும் மற்றும் இது ஒரு பாரிய சட்டவிரோத நடவடிக்கை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
மாணவர்களின் உரிமை
இந்த நிகழ்வுக்கு வரும் மாணவர்கள் குறிப்பிட்ட ஆடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், ஒரு மாணவருடன் ஒரு பெற்றோர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் எனவும் அழைப்பிதழில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது மாணவர்களின் உரிமை சார்ந்த விடயம் எனவும் இதற்காக விழா நடத்தி யாரோ ஒருவரின் பணத்தை செலவிடுவது முறையற்றது எனவும் அசோக சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்ற இச்சங்கத்தை, தற்போது தேசிய மக்கள் சக்தியுடன் தொடர்புடைய தரப்பினர் நிர்வகித்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர் ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்ற இவர்கள், இப்போது உறுப்பினர்களின் பணத்தை இது போன்ற தேவையற்ற விழாக்களுக்காகச் செலவிடுவது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்