இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற இதுவே வழி - ரணில் சுட்டிக்காட்டு
இலங்கை அபிவிருத்தியடைந்த நாடு என்ற இலக்கை அடைவதற்கு முறையான கல்வி முறைமை தேவையென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலகில் உள்ள ஒவ்வொரு அபிவிருத்தியடைந்த நாடும் அந்த நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதன் ஊடாகவே முன்னேற்றமடைந்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் மனித வளத்தை சீரமைத்தல், கல்வி முறையின் மூலம் அறிவு திறன் மற்றும் திறமைகளைக் கொண்ட பணியாளர்களை உருவாக்குதல் மற்றும் நாட்டை பிராந்திய கல்வி மையமாக மாற்றும் நோக்கத்துடன் அதிபரின் தலைமையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட 'கல்வித்துறை அமைச்சர் குழு' நியமிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பு
தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கான அமைச்சர்கள் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முதலாவது கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்களை உருவாக்கக் கூடிய எதிர்கால சந்ததியை கட்டியெழுப்புவதற்கு கல்வி முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசரத் திருத்தங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பரீட்சைகளை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் தொழில்நுட்பத்துடன் இணைந்து கல்வி முன்னோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் பாடசாலை முறையின் தரத்தை பேண வேண்டியதன் அவசியத்தையும் பாடசாலை மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அதிபர் கலந்துரையாடினார்.
கல்வித்தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் அரச, தனியார் பாடசாலைகளில் வழங்கப்படும் கல்வித் தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதற்காக ஆய்வு அலுவலகங்கள் செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அதிபர் விளக்கினார்.
பொருளாதார ரீதியாக எமது நாடு குறுகிய காலத்தில் கடன் சுமையில் இருந்து விடுபட முயற்சி செய்துவருவதாகவும் அதன்பிறகு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமானால் மூன்று ஆண்டுகளில் 8% முதல் 9% வரை பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அடுத்த 10 ஆண்டுகளில் ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் தேவைக்கேற்ப பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கும் வகையில் தானியங்கி முறையில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கல்வி, பொருளாதாரக் கட்டமைப்பு, காலநிலை மாற்றம் ஆகிய மூன்று துறைகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் இந்தக் கலந்துரையாடலில் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க உட்பட கல்வி நிபுணத்துவக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
ச.சதங்கனி
